லண்டன்: ஐரோப்பிய நாடுகளில் எங்கும் நிலவி வரும் கடும் வெப்ப அலை காரணமாக, பல நகரங்களில் வெப்பநிலை உச்சகட்டத்தை எட்டி வருகிறது. இந்தச் சூழலில், வெப்பம் தாங்க முடியாமல் பிரான்சில் இரு குழந்தைகள் காருக்குள் உயிரிழந்துள்ளன. இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு ஐரோப்பிய நாடுகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான கோடை வெப்ப அலையினால் (Heat wave) நிலைகுலைந்து போயுள்ளன. பிரான்ஸ் நாட்டின் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தொட்டுள்ள நிலையில், பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்திரியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் ‘ரெட் அலர்ட்’ விடுத்து அவசர நிலையை அறிவித்துள்ளன.
முன்கூட்டியே உக்கிரமடைந்துள்ள இந்த கோடை வெப்பம், ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் முடக்கியுள்ளதுடன், உலகளாவிய பருவநிலை மாற்றம் (Climate Change) குறித்த பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக பள்ளிள் மூடப்பட்டுள்ளன. அல்லது பாடவேளைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பிரிட்டன் நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு ஜூன் மாதத்திற்கான அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. தெற்கு இங்கிலாந்து: இங்கு வெப்பநிலை 35.8°C ஆக உயர்ந்து, ஜூன் மாதத்தின் புதிய வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது. இதற்கு முன்னதாக 1967 ஆம் ஆண்டு பதிவான கடுமையான வெப்ப அலையின் சாதனையை இந்த ஜூன் மாதம் அதிகாரப்பூர்வமாக முறியடித்துள்ளது. ஸ்காட்லாந்து: இங்கும் இந்த ஆண்டின் மிக வெப்பமான நாளாக இது பதிவாகியுள்ளது, அங்கு வெப்பநிலை 29.4°C ஐ எட்டியுள்ளது.
