இஸ்லாமாபாத்: சவுதி அரேபியா – பாகிஸ்தான் இடையே கையெழுத்தான பாதுகாப்பு சார்ந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி இனி இந்தியா தாக்கும்போது பாகிஸ்தானுக்கு, சவுதி அரேபியா உதவுமா? என்ற கேள்விக்கு பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் பதிலளித்துள்ளார். ‛‛ஆம், கண்டிப்பாக.. இந்தியா எங்களை தாக்கினால் சவுதி அரேபியா உதவிக்கு வரும்” என்று கூறி பரபரப்பை கிளப்பி உள்ளார். இதுபற்றிய விவரம் வருமாறு: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சவுதி அரேபியாவுக்கு சென்றார். சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் அந்த நாட்டின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்து பேசினார். அப்போது இருநாடுகள் இடையே பரஸ்பர பாதுகாப்பு சார்ந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன்படி பாகிஸ்தான் மீதான எந்தவொரு தாக்குதலும் சவுதி அரேபியா தன் மீதான தாக்குதலாக எடுத்து கொள்ளும். அதேபோல் சவுதி அரேபியா மீதான எந்தவொரு தாக்குதலையும், பாகிஸ்தான் தன் மீதான தாக்குதலாக எடுத்து கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதுமட்டுமின்றி பாகிஸ்தான் மீது யாராவது தாக்குதல் நடத்தினால் சவுதி அரேபியா பதிலடி கொடுக்கும். சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும். அதேபோல் சவுதி அரேபியாவுக்கு தேவையான அணுஆயுதங்களையும் பாகிஸ்தான் வழங்கும். இந்த ஒப்பந்தம் தான் பேசும் பொருளாகி உள்ளது.
இதனால் பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதலுக்கு நாம் பதிலடி கொடுக்கும்போது சவுதி அரேபியா அந்த நாட்டுக்கு உதவும் என்று கூறப்படுகிறது. சவுதி அரேபியா நம்முடன் நல்ல நட்பில் உள்ளது. இதனால் சவுதி அரேபியா, நமக்கு எதிராக பாகிஸ்தானுக்கு உதவுமா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி பாகிஸ்தான் ராணுவ துறை அமைச்சர் கவாஜா ஆசிப் விளக்கம் அளித்துள்ளார்.
