இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்கள், தற்போது 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டிகளிலும் எதிரொலித்துள்ளது.
புலவாயோ நகரில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டிகளின்போது, டாஸ் போடும் போது இரு கிரிக்கெட் அணிகளின் கேப்டன்களும் கைகுலுக்கிக் கொள்ளவில்லை.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டிகள் ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் ஜனவரி 15 முதல் நடைபெற்று வருகிறது.
இந்தியா விளையாடிய முதல் போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் (டக்வொர்த் லீவிஸ் விதிப்படி) அமெரிக்காவை தோற்கடித்தது.
சனிக்கிழமையன்று இந்தியா தனது இரண்டாவது போட்டியில் வங்கதேசத்தை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டியில் கேப்டன்கள் கைகுலுக்காதது உள்நோக்கமற்றது என வங்கதேச கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
இந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி 18 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
