அன்புராஜ் நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்துக்கு சென்று மனைவியை கொலை செய்ததாக கூறி சரண் அடைந்தார்.
நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டானை அடுத்த ஆலடிப்பட்டியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவருடைய மகன் அன்புராஜ் (வயது 24). பெயிண்டரான இவர் கடந்த 2023-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த பிரித்திகா (20) என்ற பட்டதாரி இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்தார்.
பின்னர் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்தனர். அவர்களிடம் உறவினர்கள் பேசி காதல் தம்பதியரை மீண்டும் சேர்த்து வைத்தனர். தொடர்ந்து அவர்கள் சொந்த ஊரில் இருக்க வேண்டாம் என்று கருதி நெல்லை சந்திப்பில் உள்ள மீனாட்சிபுரத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
பிரித்திகா தனது தாய் மற்றும் குடும்பத்தினரிடம் அடிக்கடி செல்போனில் பேசியது அன்புராஜிக்கு பிடிக்கவில்லை. இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று வழக்கம்போல் அன்புராஜ் வேலைக்கு சென்று விட்டு இரவில் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது மனைவி பிரித்திகாவிடம், ‘எதற்காக உனது தாய்.சகோதரனிடம் செல்போனில் பேசினாய்?” என்று கூறி தகராறு செய்தார்.
இதொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அன்புராஜ், பிரித்திகா அணிந்திருந்த துப்பட்டாவால் அவரது கழுத்தைச் சுற்றி நெரித்து கீழே தள்ளினார். பின்னர் வீட்டில் காய்கறி வெட்டுவதற்கு வைத்திருந்த கத்தியால் பிரித்திகா கழுத்தை அறுத்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
