சென்னை, ஜூன் 30–
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சென்னை சாலையில் ‘பைக்’ சாகசங்களில் ஈடுபட்ட 6 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
அடையாறு, பெசன்ட் நகரில் இளைஞர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவில், ஐந்துக்கும் மேற்பட்ட பைக்குகளில் ‘வீலிங்’ சாகசம் செய்து, வாகன ஓட்டிகளை மிரள வைத்துள்ளனர்.
போலீசார் சாலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக வைத்திருந்த இரும்பு தடுப்புகளை பைக்கில் தரதரவென இழுத்துச் சென்றனர். அப்போது தடுப்புகள் சாலையில் உரசியதால் தீப்பொறிகள் பறந்தன. மற்றொரு இளைஞர் பைக்கின் முன் பக்க வீலை மேலே தூக்கி ஆபத்தான முறையில் அதிவேகமாக சென்றார்.
இன்னொருவர் ரோட்டில் இங்கும், அங்குமாக வளைந்து, வளைந்து ஓட்டிச் சென்றார். இப்படி 5-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தனித்தனியாகவும், இருவராக சேர்ந்தும் பைக் சாகசத்தில் ஈடுபட்டனர்.
போலீசாரின் ரோந்து வாகனத்தில் இருந்தபோதும், எவ்வித பயமும் இல்லாமல் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில், இளைஞர்கள் இந்த அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி, தங்களின் சாதனை என, இந்த காட்சிகளை ‘வீடியோ’ எடுத்து, சமூக வலைதளங்களிலும் பதிவேற்றம் செய்துள்ளனர். இது வேகமாக பரவி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
சம்பவம் தொடர்பாக சாஸ்திரி நகர் மற்றும் அடையாறு போலீசார் வழக்கு பதிந்து, ‘சிசிடிவி’ கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து, ரேசில் ஈடுபட்டோரை தீவிரமாக தேடி வந்தனர்.
மேலும், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற சாகசங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கமிஷனர் அமல்ராஜ் எச்சரித்துள்ளார்.
‘பைக் ரேஸில் ஈடுபட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்படும்; ஓட்டுநர் உரிமம் ரத்தாகும்; வழக்குப்பதிந்து அபராதம் விதிக்கப்படும்; பொது சொத்துக்கு சேதம் விளைவித்த குற்றத்திற்காக கைது நடவடிக்கை பாயும்’ என போலீசார் எச்சரித்து வருகின்றனர்.
அடையாறு மற்றும் பெசன்ட் நகர் பகுதிகளில் பைக் சாகசங்களில் ஈடுபட்ட 5 பள்ளி மாணவர்களையும் ஒரு கல்லூரி மாணவரையும் மொத்தம் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரூ. 25,000 அபராதம்
பைக்ரேஸில் ஈடுபட்டவர்களில் 3 பேர் சிறுவர்கள் என தெரிய வருகிறது. இவர்கள் மீது, பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், பிறரின் உயிருக்கு அச்சத்தை ஏற்படுத்தல் உள்ளிட்ட செயலில் ஈடுபட்டதற்காக குற்ற வழக்குகள் பதிவு செய்து, கைது செய்யப்பட்டுள்ளனர். வாகன உரிமையாளர்கள், சிறுவர்களின் பெற்றோராக இருந்தால், அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும். குறைந்த பட்சம், 25,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
