சுமார் ஓராண்டு நீடித்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு பாகிஸ்தான், செளதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்பு உற்பத்தித் துறை அமைச்சர் ரசா ஹயாத் ஹர்ராஜ் புதன்கிழமை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் பிராந்திய வன்முறைகள் வெடிக்கக் கூடும் என்ற அச்சங்களுக்கு மத்தியில், இந்த நாடுகள் ஒரு பொதுவான பாதுகாப்பு அரணைத் தேடுகின்றன என்பதற்கான அறிகுறியாக இது இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மூன்று பிராந்திய சக்திகளுக்கு இடையில் ஏற்பட சாத்தியமுள்ள இந்த ஒப்பந்தம், கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட செளதி-பாகிஸ்தான் இருதரப்பு ஒப்பந்தத்திலிருந்து வேறுபட்டது என்று ரசா ஹயாத் ஹர்ராஜ் கூறினார்.
இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு மூன்று நாடுகளுக்கும் இடையே இறுதி உடன்பாடு அவசியம் என்றும் அவர் கூறினார்.
“பாகிஸ்தான்-செளதி அரேபியா-துருக்கி இடையிலான முத்தரப்பு ஒப்பந்தம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்படும் நிலையில் உள்ளது,” என ஹர்ராஜ் ராய்ட்டர்ஸிடம் கூறினார்.
“வரைவு ஒப்பந்தம் எங்களிடம் உள்ளது. வரைவு ஒப்பந்தம் செளதி அரேபியா மற்றும் துருக்கியிடமும் உள்ளது. மூன்று நாடுகளும் இது குறித்து ஆலோசித்து வருகின்றன. இந்த ஒப்பந்தம் கடந்த 10 மாதங்களாக நடைமுறையில் உள்ளது” என்றார்.
வியாழக்கிழமை இஸ்தான்புல்லில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, மூன்று தரப்பு பேச்சுவார்த்தைகள் குறித்த ஊடக செய்திகள் பற்றி கேட்கப்பட்ட போது, துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கான் ஃபிடான், பேச்சுவார்த்தைகள் நடந்ததாகக் கூறினார். ஆனால் இதுவரை எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை என்று அவர் தெரிவித்தார்.
பிராந்தியத்தில் அவநம்பிக்கையினால் ஏற்படும் “பிளவுகள் மற்றும் பிரச்னைகளை” போக்க பரந்த பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் நம்பிக்கையின் அவசியத்தை ஃபிடான் வலியுறுத்தினார்.
