தேனி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் (SSI) செந்தில் குமார், தனது பணியை முடித்துவிட்டு சீருடை அணியாமல் (சாதாரண உடையில்) வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பொதுமக்கள் நடமாடும் சாலையில் இளைஞர்கள் கொண்ட கும்பல் பட்டாசு வெடித்துக் கொண்டிருப்பதை அவர் பார்த்தார். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் சாலையை விட்டு விலகிச் செல்லுமாறு அவர்களுக்கு அறிவுறுத்திய SSI செந்தில் குமார், அவர்களின் செயல்களைத் தனது கைபேசியில் வீடியோ எடுக்க முயன்றார்.
அந்த இளைஞர்களில் ஒருவரைப் பிடிக்க முயன்ற போது, ஒரு நபர் செந்தில் குமாரை தனது முழங்கையால் தாக்கியதில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.
உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்த ரோந்துப் படை போலீசார், அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் நடந்த இடத்தைப் பார்வையிட்ட தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP), இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த SSI செந்தில் குமாருக்கு ஏற்கனவே இதயம் தொடர்பான உடல்நலப் பிரச்சனைகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
