8 பேர் அதிரடி கைது.தமிழ்நாடு முழுவதும் தீபாவளி தினத்தன்று சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 17 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மது போதை, கஞ்சா போதையில் கொலைகள் நடந்துள்ளன. இவர்களில் பெரும்பாலானவர்கள் ரவுடிகள் பட்டியலில் உள்ளவர்கள் ஆவர். இந்த சம்பவங்களை தொடர்ந்து ரவுடிகள் பட்டியலில் உள்ளவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரமாகின. அதன்படி நேற்று முன் தினம் தமிழ்நாடு முழுவதும் ரவுடிகள் வேட்டை நடந்தது. குமரி மாவட்டத்திலும் ரவுடிகள் வேட்டை நடைபெற்றது. ரவுடிகள் பட்டியலில் உள்ளவர்களை போலீசார் கைது செய்தனர். இதில் 4 இடங்களில் எஸ்.ஐ.க்களை வெட்ட முயன்ற கும்பல்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராஜாக்கமங்கலம் அருகே எஸ்.ஐ. பென்சன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது, வடலிவிளை சாந்தபுரத்தை சேர்ந்த அருள் (27), பருத்திவிளை பகுதியை சேர்ந்த பாபு (36) ஆகியோர் சாக்கு பையுடன், தனியார் மண்டபம் அருகே நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, திடீரென பையில் இருந்த அரிவாளை எடுத்து எஸ்.ஐ. பென்சனை வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது. இதில் எஸ்.ஐ. மற்றும் போலீசார் தப்பினர். இதை யடுத்து அருள், பாபுஇருவரையும் போலீசார் கைது செய்தனர்.இவர்கள் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளிகள் பட்டியலில் உள்ளனர்.
தென் தாமரைக்குளம் அருகே உள்ள முகிலன்குடியிருப்பு சந்திப்பு பகுதியில் எஸ்.ஐ. சுரேஷ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது, நடுரோட்டில் அரிவாளுடன் நின்று பொதுமக்களை அச்சுறுத்தியதாக முகிலன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த பால ஸ்ரீராமச்சந்திரன் என்ற கண்ணன் (33), அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த முத்து என்ற முத்துக்குமார் (38) ஆகியோரை கைது செய்ய சென்றனர். அப்போது அவர்கள் போலீசாரிடமும் அரிவாளை காட்டி மிரட்டி தப்ப முயன்றனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இவர்கள் இருவரும் குற்றவாளிகள் சரித்திர பதிவேடு பட்டியலிலும் உள்ளனர்.
அஞ்சுகிராமம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் பிரிய ராஜ்குமார் தலைமையிலான போலீசார் ரஸ்தா காடு சந்திப்பு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது வட்டக்கோட்டையைச் சேர்ந்த பெலிக்ஸ், பால்குளம் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த சுரேந்தர், ஆமணக்கன்விளையைச் சேர்ந்த நந்தகோபால் ஆகியோர் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தனர். அவர்களை கலைந்து போகுமாறு எஸ்.ஐ. பிரிய ராஜ்குமார் கூறினார். அப்போது அவர்கள், நீ உயிரோடு இருந்தால் தானே எங்கள் வீட்டுக்கு சோதனை செய்ய வருவாய் என கூறி, அரிவாளை எடுத்து எஸ்.ஐ. பிரிய ராஜ்குமாரை வெட்ட முயன்றனர். இதில் அவர் உயிர் தப்பினார். அஞ்சுகிராமம் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும்கைது செய்தனர். இவர்கள் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளன.
சுசீந்திரம் சப் இன்ஸ்பெக்டர் கல்யாணசுந்தரம், நேற்று முன் தினம் மாலை பறக்கை காடேற்றி குளம் அருகே ரோந்து பணியில் இருந்த போது, அந்த வழியாக புத்தளம் அரிய பெருமாள் விளையை சேர்ந்த தனபாலன் (23) என்பவர் சாக்கு பையுடன் வந்தார். அவரை தடுத்து நிறுத்தி விசாரித்த போது, அரிவாளை எடுத்து எஸ்.ஐ. கல்யாண சுந்தரத்தை வெட்ட முயன்றுள்ளார். இதில் எஸ்.ஐ. தப்பினார். இது குறித்து சுசீந்திரம் போலீசார் தனபாலன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
குமரி மாவட்டத்தில் நேற்றும் 2வது நாளாக ரவுடிகள் வேட்டை மற்றும் தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்கும் நடவடிக்கைகள் நடந்தன. இரு நாளில் 27 ரவுடிகள் கைது செய்யப்பட்டு இருந்தனர். இவர்களில் 12 பேர் வரை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மற்றவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து கைது நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என போலீசார் கூறினர்.
