இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் இடையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணியை ஷுப்மன் கில் வழிநடத்த மாட்டார் எனக் கூறப்படுகிறது. 15 பேர் பட்டியலும் வெளியாகி உள்ளது.ஆசியக் கோப்பை 2025 தொடர், செப்டம்பர் 28ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனைத் தொடர்ந்து, அக்டோபர் 2ஆம் தேதி முதல், இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் துவங்கும். முதல் போட்டி அகமதாபாத்திலும், அடுத்த போட்டி 10ஆம் தேதி டெல்லியிலும் துவங்கும்.
இத்தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியை சமீபத்தில் அறிவித்தனர். இந்நிலையில், இத்தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்ட இந்திய அணி தேர்வுக்குழு, 15 பேர் பட்டியலை தேர்வு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
ஷுப்மன் கில் நீக்கம் : முதல் டெஸ்ட் போட்டியில், ஷுப்மன் கில் விளையாட மாட்டார் எனக் கூறப்படுகிறது. இவர், இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் இருந்தே தொடர்ச்சியாக விளையாடி வருவதாலும், ஆசியக் கோப்பை பைனல் செப்டம்பர் 28ஆம் தேதிதான் நிறைவு பெறுகிறது என்பதாலும், முதல் போட்டியில் விளையாட முடியாத நிலையில் கில் இருக்கிறார்.
அடுத்து, இரண்டாவது போட்டியில் விளையாடினாலும், ஓய்வு கொடுத்துவிட்டு, அக்டோபர் 19ஆம் தேதி துவங்கும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில், கேப்டனாக விளையாட வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒருவேளை, இரண்டாவது போட்டியில், கில் விளையாட விரும்பினால், அப்போட்டியில் கேப்டனாக ஆட வைப்பது குறித்தும், பிசிசிஐ ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
கேப்டன் யார்? ஷுப்மன் கில்லுக்கு மாற்றாக, மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் தொடரில், கே.எல்.ராகுல் பொறுப்பு கேப்டனாக செயல்பட வாய்ப்பு இருப்பதாகவும், ஷ்ரேயஸ் ஐயருக்கு துணைக் கேப்டன் பதவியை கொடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கருண் நாயர் இடம்: சமீபத்தில், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில், கருண் நாயருக்கு போதுமான வாய்ப்பை கொடுத்துவிட்டார்கள். ஆனால், அதில் கருண் நாயர் சிறப்பாக செயல்படவில்லை. இதனால், இனி கருண் நாயருக்கு மாற்றாக என் ஜெகதீசனுக்குதான் வாய்ப்பு கிடைக்கும் எனக் கருதப்படுகிறது.
டாப் ஆர்டர்: ஓபனர்கள் இடங்களில் யாஷஸ்வி ஜெய்ஷ்வால், கே.எல்.ராகுல் இருக்கிறார்கள். அடுத்து சாய் சுதர்ஷன், கில் இடத்திற்கு ஷ்ரேயஸ் ஐயர் இருக்கிறார்.
மிடில் வரிசை: ரிஷப் பந்திற்கு காயம் ஏற்பட்டுள்ளதால், அவருக்கு மாற்றாக துரூவ் ஜோரல் இடம்பெறுவார். அடுத்து, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், நிதிஷ் ரெட்டி ஆகியோர் இருப்பார்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
பௌலர்கள்: பந்துவீச்சாளர்கள் இடங்களில் முகமது சிராஜ், ஜஸ்பரீத் பும்ரா, குல்தீப் யாதவ், ஆகியோர் இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது.
மேலும், 15ஆவது இடத்தில் சர்பரஸ் கானை சேர்ப்பது குறித்து, பிசிசிஐ தேர்வுக்குழு ஆலோசனை மேற்கொண்டு வருகிறதாம்.
இந்திய உத்தேச அணி (மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் தொடர்) – யாஷஸ்வி ஜெய்ஷ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்ஷன், ஷ்ரேயஸ் ஐயர், துரூவ் ஜோரல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், ஜஸ்பரீத் பும்ரா, அக்சர் படேல், நிதிஷ் ரெட்டி, என் ஜெகதீசன், சர்பரஸ் கான்.
மேற்திந்தியத் தீவுகள் அணி, சமீப காலமாகவே பலமில்லாத அணியாக இருக்கிறது. இதனால், இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி மெகா வெற்றியைப் பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
