தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் குதிரை பேரம் நடந்ததாக எழுந்த புகார் தொடர்பான வழக்கு. புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.
தவெக ஆட்சியமைத்ததை தொடர்ந்து, இக்கட்சி, குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக கூறி, மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். அதில், நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், விஜய் தலைமையிலான தவெக கட்சி, 108 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, ஆட்சி அமைத்திருப்பதாகவும் திமுக கூட்டணியில் இருந்த சில கட்சிகள் மற்றும் அதிமுகவின் ஒரு பிரிவினரின் ஆதரவுடன், சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 வாக்குகளை பெற்று தவெக வென்றதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்காக, அரசியல் கட்சிகளிடையே சுமார் ரூ.1000 கோடி அளவிற்கு குதிரை பேரம் நடந்ததாக புகார்கள் எழுந்திருப்பதாகவும், எனவே இது குறித்து சிபிஐ விரைந்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும், இந்த விசாரணை முடியும் வரை தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
