திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு, தமிழகத்தைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத பக்தர் ஒருவர் சுமார் ரூ.160 கோடி மதிப்பிலான 121 கிலோ தங்க ஆபரணங்களை காணிக்கையாக வழங்க உள்ளார்.
தேவஸ்தான வரலாற்றிலேயே தனிநபர் ஒருவர் வழங்கும் மிகப்பெரிய காணிக்கையாக இது கருதப்படுகிறது. 9 செட்களாக, 43 வகைகளில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆபரணங்களில் கிரீடம், பாதுகைகள், பல அடுக்குத் தங்க மாலைகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
ஏழுமலையானுக்கு அணிவிக்கத் தேவையான ஆபரணங்கள் குறித்து ஐந்து மாதங்களுக்கு முன்பே தேவஸ்தானத்திடம் விவரங்களைக் கேட்டறிந்த பக்தர், அதற்கேற்ப பிரத்யேகமாக இவற்றை வடிவமைத்துள்ளார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில், திருமலையில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்தத் தங்க ஆபரணங்கள் காணிக்கையாக வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
