லீடர்ஸ் அமைப்பில் இதுவரை 18 லட்சம் பேர் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ள அண்ணாமலை, ஜூலை மாதம் முதல் இயக்கத்தின் அரசியல் நடவடிக்கைகள் தீவிரமாக தொடங்கும் என்றும், மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை உருவாக்கும் புதிய அரசியல் சக்தியாக இந்த அமைப்பு உருவெடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், கிராமப்புற வளர்ச்சி, விவசாய முன்னேற்றம் மற்றும் இளைஞர்களின் பங்களிப்பை மையமாகக் கொண்டு தனது அரசியல் பயணத்தை முன்னெடுக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் அண்ணாமலை பேசியதாவது: ஜூன் 5 ஆம் தேதி அறைகூவல் விடுத்தேன். வீ த லீடர்ஸ் இயக்கத்தில் நீங்கள் எல்லாம் சேர வேண்டும், நல்ல அரசியல் இயக்கத்தை தொடங்குவோம். அதில் இருந்து அரசியல் கட்சியை உருவாக்குவோம். இன்றைக்கு 18 லட்சம் பேர் எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் பெரிய நம்பிக்கையோடு இந்த இயக்கத்தில் இணைந்திருக்கிறீர்கள். பெரிய மாற்றத்தை கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு வந்துள்ளீர்கள். அதற்கு நான் பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
