சென்னை: தமிழக காவல்துறையில் நிர்வாகக் காரணங்களுக்காகவும், பணிகளை முறைப்படுத்தவும் அவ்வப்போது காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது சென்னை மற்றும் தாம்பரம் மாநகர காவல் ஆணையரகங்களுக்கு உட்பட்ட 40 டி.எஸ்.பி அந்தஸ்து கொண்ட அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி மகேஷ்குமார் அகர்வால் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அண்மையில் தமிழ்நாடு காவல்துறையில் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் ஒரே நாளில் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். 17 மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள் அதிரடியாக மாற்றப்பட்டனர்.
சென்னை காவல் ஆணையரகத்தில் 32 அதிகாரிகள் மாற்றம் சென்னை பெருநகர காவல் ஆணையரகத்திற்கு (Greater Chennai Police) உட்பட்ட பகுதிகளில் பணியாற்றி வந்த 32 டி.எஸ்.பி-க்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையின் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட முக்கியப் பிரிவுகளில் பணியாற்றி வந்த அதிகாரிகள் இதில் அடங்குவர். சென்னை மாநகரப் பகுதிகளில் சட்டம் ஒழுங்கை மேலும் பலப்படுத்தவும், நிர்வாகத் திறனை மேம்படுத்தவும் இந்த பரவலான மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தாம்பரத்தில் 8 பேருக்கு இடமாற்றம் சென்னைக்கு அடுத்தபடியாக, தாம்பரம் மாநகர காவல் ஆணையரக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பணியாற்றி வந்த 8 டி.எஸ்.பி-க்களும் வேறு இடங்களுக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புறநகர்ப் பகுதிகளில் குற்ற நிகழ்வுகளைக் கட்டுப்படுத்தவும், கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் அனைவரும் தங்களது புதிய பொறுப்புகளை உடனடியாக ஏற்குமாறும், அதற்கான விவரங்கள் அந்தந்த காவல் ஆணையரகங்கள் மூலம் அதிகாரிகளுக்கு முறைப்படி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் டி.ஜி.பி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தலைநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சட்டம் ஒழுங்குப் பராமரிப்பை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில் இந்த அதிரடிப் பணியிட மாற்றம் மேற்கொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
