தமிழகத்தின் 17-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (ஜூன் 18) தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இக்கூட்டத்தில் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் கலந்து கொண்டு தொடக்க உரையாற்றினார். ‘வணக்கம்’ எனக் கூறி தனது உரையைத் தொடங்கிய ஆளுநர், தொடர்ந்து ஆங்கிலத்தில் உரையை வாசித்தார்.
ஆளுநர் உரையில் போதைப்பொருள் விவகாரம் குறித்த முக்கிய அம்சங்கள் இடம் பெற்றன. அதில், கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரித்துள்ளது. போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுக்க முந்தைய அரசுகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்குப் போதைப்பொருட்களே முக்கிய காரணமாக விளங்குகின்றன.
இந்த போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுத்து, போதை இல்லா தமிழகத்தை உருவாக்க அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, மாவட்டம் தோறும் போதைப்பொருளை ஒழிக்கப் பல்வேறு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அரசு எடுத்து வரும் இத்தகைய தொடர் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு முதற்கட்டமாகக் கல்வி நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களின் அருகே அமைந்திருந்த 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
