ஜூன்.13- திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஆண்டியப்பனூர் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பாப்பாத்தி அம்மன் கோயிலில் தொடர்ந்து பித்தளை மணிகள் காணாமல் குறைந்து வருவதை கவனித்த பூசாரி மற்றும் பொதுமக்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று மாலை மர்ம நபர் ஒருவர் ஸ்கூட்டரில் வந்து, கட்டிங் பிளேடு மற்றும் சுத்தியுடன் கோயில் அருகே சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பொதுமக்கள் அவரை பிடித்து குசிலாப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்டவர் ஏ.எஸ்.குமார் (48) என்பதும், அவர் தமிழக வெற்றிக் கழக ஆண்டியப்பனூர் ஊராட்சி கிளைக் கழக பொறுப்பில் இருப்பதும், அவர் மது போதையில் இருப்பதை தெரியவந்தது.
மேலும், அவரிடம் இருந்த கட்டிங் பிளேடு, சுத்தி உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணையில் கோயில் மணிகளை பித்தளைக்காக எடுத்துச் சென்று விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து குசிலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோயில் மணி திருட்டு சம்பவத்தில் அரசியல் கட்சி நிர்வாகி சிக்கியிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
