சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததில் குதிரை பேரம் நடந்துள்ளது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென தேர்தல் ஆணையத்துக்கு வழக்கறிஞர் மனு அனுப்பி உள்ளார். மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இயக்குநர்கள், ஒன்றிய சட்டத்துறை அமைச்சர், இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஆகியவற்றிற்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவைச் சேர்ந்த 25 எம்எல்ஏக்கள் கட்சியின் கொறடா உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்த நடவடிக்கைக்கு எதிராக தகுதி நீக்க மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, அவை தற்போது சபாநாயகர் பரிசீலனையில் உள்ளன.
இந்நிலையில் எம்எல்ஏக்கள் மரகதம் குமாரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகியோர், தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இவர்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் உடனடியாக ஏற்றுக் கொண்டுள்ளார். இவர்கள் தலைமைச் செயலக வளாகத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை சந்தித்து, தவெகவில் தங்களை அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டுள்ளனர்.
