பெண்கள் குறித்து அவதூறு பரப்பும் நோக்கில் வீடியோ வெளியிட்டதாக பா.ஜ.க பெண் நிர்வாகி அலிசா அப்துல்லா அளித்த புகாரில் சிறையில் உள்ள திருச்சி சூர்யா, யூடியூபர் முக்தார் இருவர் மீதும் சென்னை போலீஸ் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக பா.ஜ.க. மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு செயலாளராக இருப்பவர், அலிஷா அப்துல்லா. இவர், இந்தியாவின் முதல் பெண் தேசிய மோட்டார் பந்தய சாம்பியனும் ஆவார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி சூர்யா, ‘யூடியூபர்’ முக்தார் ஆகிய 2 பேர் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகார் மனு அளித்தார்.
திருச்சி சூர்யா, முக்தார் மீது அலிஷா அப்துல்லா புகார்
இந்த புகார் மனு குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “நான் 2 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலுக்கு வந்தேன். அப்போது முக்தாரும், திருச்சி சூர்யாவும் என்னை பற்றி அவதூறாக பேசினார்கள். குரைக்கும் நாய் கடிக்காது என்பதுபோல் நான் விட்டுவிட்டேன். ஆனால் கடந்த 12 நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோவை அவர்கள் வெளியிட்டனர். அதில் எனக்கு பிறந்த 2 இரட்டை குழந்தைகள் பற்றி பேசினார்கள். ஒரு குழந்தை என்னுடைய முகத்தில் இருப்பது போன்றும், இன்னொரு குழந்தை அண்ணாமலை மாதிரி இருப்பதும் போன்றும் புகைப்படத்தை வைத்து பதிவிட்டனர்.
இதை நான் விடமாட்டேன். அவர்கள் 2 பேரையும் செருப்பால் அடிக்க வேண்டும். அவர்கள் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைக்கவில்லை என்றால் நானே வேறு மாதிரி ஆக்ஷன் எடுப்பேன். முக்தார் சமீபத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து உள்ளார். அப்போது அவருக்கு யார் ஆதரவாக இருக்கிறார்கள் என்று பாருங்கள். எனவே இந்த விவகாரத்தில் தற்போதைய த.வெ.க. அரசாங்கம் முக்தார் மீதும், திருச்சி சூர்யா மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து போலீஸ் கமிஷனரிடம் 10 நிமிடம் பேசி இருக்கிறேன். நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.” என்று அலிஷா அப்துல்லா தெரிவித்திருந்தார்.
திருச்சி சூர்யா, முக்தார் கைது
இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் போலீசார் திருச்சி சூர்யா, யூடியூபர் முக்தார் மீது வழக்குப் பதிவு செய்தனர். இருவரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், இந்த தனிப்படை போலீசார் தேடி திருச்சி சென்று, திருச்சி சூர்யாவை கைது செய்தனர். அதேவேளையில் யூடியூபர் முக்தார் தலைமறைவானார். அவர் கர்நாடகாவில் பதுங்கி இருந்த சூழலில், தனிப்படை போலீசார் அவரையும் கைது செய்தனர். திருச்சி சூர்யாவை ஒருநாள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர். தற்போது இருவரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருச்சி சூர்யா, முக்தார் மீது பாய்ந்த குண்டர் சட்டம்
இந்த நிலையில், பெண்கள் குறித்து அவதூறு பரப்பும் நோக்கில் வீடியோ வெளியிட்டதாக பா.ஜ.க பெண் நிர்வாகி அலிசா அப்துல்லா அளித்த புகாரில் சிறையில் உள்ள திருச்சி சூர்யா, யூடியூபர் முக்தார் இருவர் மீதும் சென்னை போலீஸ் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதால் இருவரும் இனி ஓராண்டு வரை ஜாமீனில் வெளியே வர முடியாது. சிறையில் இருந்து வெளியே வர, அவர்கள் நீதிமன்றத்தை நாடி குண்டர் சட்டத்தை முதலில் உடைக்க வேண்டும். அதன்பிறகு தான் அவர்களால் ஜாமீனில் வெளியே வர முடியும் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.
